1963 ஜனவரி முதல் 1964 ஜனவரி வரை இந்திய அரசு, விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட முடிவு செய்தது. விவேகானந்தர் ஓர் ஹிந்துத் துறவி மட்டுமல்ல. ஒரு தேசிய அடையாளம். கொண்டாட்டம் அவசியமானது. மேற்கு வங்காளம் முதல் கன்னியாகுமரி வரை அவரைத் தெரியாதவர்கள் கிடையாது. ஆராதிக்காதவர்கள் கிடையாது. அவரால் உந்தப்படாதவர்களோ, உத்வேகம் அடையாதவர்களோ கிடையாது.
குமரி மாவட்ட மக்களுக்கு இந்தக் கொண்டாட்ட அறிவிப்பு சற்றே கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. காரணம், விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறார். கடலுக்குள் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பெரும் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று தினங்கள் (டிசம்பர் 25,26,27) அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்.
இந்த நூற்றாண்டு விழாச் சமயத்தில் அந்தப் பாறையில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பினால் என்ன? பாறைக்குச் சென்றுவர ஒரு பாலமும் சேர்த்துப் போட முடிந்தால் நல்லது.
அந்தப் பாறைக்கு விவேகானந்தருக்கு முன்னால் சென்று தவமிருந்தது, தேவி கன்னியாகுமரி. இறைவி. சிவபெருமானை மணப்பதன்பொருட்டு அங்கே அவள் தவமிருந்ததாக ஐதீகம். பாறையில் பதிந்துள்ள பாதம் அவளுடையதுதான் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. ஸ்ரீபாதப் பாறை என்று அந்த இடத்தைக் குறிப்பிடுவார்கள்.
இது ஒரு புறமிருக்க, பாறையில் விவேகானந்தருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கலாம் என்று தீர்மானித்ததும் அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டது. வேலாயுதம் பிள்ளை என்பவர் தலைமையில் அமைந்த அந்தக் குழுவில் சில ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் இருந்தார்கள். விஷயத்தையும் திட்டத்தையும் ராமகிருஷ்ண மடத்துக்குத் தெரிவித்தார்கள். ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகி,ராமகிருஷ்ண தபோவனம் என்ற இன்னொரு அமைப்பைத் தொடங்கி நடத்திக்கொண்டிருந்த சுவாமி சித்பவானந்தருக்கும் விஷயம் சொன்னார்கள்.
விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் யாருக்குக் கருத்து வேறுபாடு இருக்க முடியும்? எனவே எந்தத் தடையுமின்றிப் பரபரவென்று ஆலோசனைகள் நடைபெறத் தொடங்கின. விஷயம் வேகமாக வெளியே பரவ ஆரம்பித்தது.
சிக்கல், கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் வடிவில் வந்தது. பாறையில் விவேகானந்தருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை ஏற்க முடியாது. நாநூறு வருடங்களுக்கு முன்னால் புனித சேவியர் இங்கு வந்தபோது அவர் அமர்ந்து ஜபம் செய்த பாறை அது. கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானது.
குரலெழுப்பியவர்கள், குமரி மீனவர்கள். பாறையின் நீள அகலம் என்ன என்றுகூட மக்கள் யாருக்கும் தெரியாத நிலையில், தினமும் மீன்பிடிக்கச் செல்லும் அவர்கள்தாம் பாறையில் இறங்கி இளைப்பாறுகிறவர்கள். அவர்களை இந்த விஷயத்தில் தூண்டி விட்டவர் உள்ளூரில் இருந்த ஒரு பாதிரியார். கத்தோலிக்கர். விடாதீர்கள். அந்தப் பாறை கிறிஸ்தவர்களுக்கே சொந்தம். நாம் அதை நிறுவியாகவேண்டும்.
மீனவர்கள் ஒரு காரியம் செய்தார்கள். யாருமறியாத ஓர் இரவில் பாறையின்மீது பெரிதாக ஒரு சிலுவையைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தார்கள். கரையில் இருந்து பார்த்தாலே தெரியக்கூடிய அளவுக்குப் பெரிய சிலுவை.
சூடு ஏறத் தொடங்கிய தருணம் அது. கன்னியாகுமரி மக்கள், பாறையில் சிலுவையைக் கண்டதும் கொதித்துப் போய் அரசுக்குக் கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. மூலைக்கொரு கண்டனக் கூட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் என்று ஆரம்பிக்கப்பட்டன. ‘ஸ்ரீபாதப்பாறை’ என்று அழைக்கப்பட்ட இடம். கிறிஸ்தவர்கள் எப்படி அங்கே சிலுவை நடலாம்?
மக்கள் ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க, தேவி கன்னியாகுமரி ஆலய நிர்வாகம், தன் பங்குக்குப் பாறை தனக்குத்தான் சொந்தம் என்று இன்னொரு தாக்குதலைத் தொடுத்தது.
எனவே விவேகானந்தர் நினைவுச் சின்னம் அமைக்க விரும்பிய குழு, கோயில் நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் எழுதியது. பாறையில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பவும் போய்வர ஒரு பாலம் கட்டவும் அனுமதி வேண்டும்.
கோயில் நிர்வாகத்துக்குக் கிறிஸ்தவர்களைப் பற்றித்தான் கவலை. விவேகானந்தரைப் பற்றி அல்ல. எனவே அவர்கள் குழுவுக்கு அனுமதி கொடுத்தார்கள். நினைவுச் சின்னமும் பாலமும் கட்டலாம். ஆனால் எல்லாம் முடிந்ததும் அனைத்தையும் கோயிலின் பொறுப்பில் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட வேண்டும்.
இதனிடையில் பாறையின் உரிமை குறித்த கோஷங்கள் மிகவே, அரசு இதில் தலையிட முடிவு செய்தது. பாறை யாருக்குச் சொந்தம்? விசாரணையில், நிச்சயமாக கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமில்லை என்று தெரிந்தது. எனவே பாறையில் அத்துமீறி நிறுவியிருந்த சிலுவையை அகற்றும்படி வருவாய்த் துறைக்கு உத்தரவு போனது.
இப்போது சிக்கல் பெரிதாகத் தொடங்கியது. ஏற்கெனவே நாநூறு வருடங்களுக்கு முன்னர் அங்கு சிலுவை இருந்தது. காலப்போக்கில் யாரோ அதை அழித்துவிட்டார்கள். இப்போது நடப்பட்ட சிலுவையைப் பாதுகாக்கவேண்டியது தமிழக அரசின் கடமை என்று கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகளும் செய்தி ஊடகங்களும் பேச ஆரம்பித்தார்கள். வெறுமனே சிலுவை அமைத்தால் போதாது. புனித சேவியருக்கு அங்கொரு நினைவுச் சின்னமும் எழுப்பியாக வேண்டும்.
தமிழக அரசு யோசித்தது. அதைவிட, முதல்வர் பக்தவத்சலம் யோசித்தார் என்று சொல்லலாம். எதற்குப் பிரச்னை? விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் என்று ஆரம்பித்ததால்தானே இத்தனை விவகாரங்கள்? வெகு நிச்சயமாக ஒரு மதக்கலவரத்துக்கு தூபம் போடுவதுபோல் இது அமைந்துவிடும்.
எனவே சிலுவையும் வேண்டாம், விவேகானந்தரும் வேண்டாம், பாறையை அப்படியே விடுங்கள் என்று பக்தவத்சலம் சொல்லிவிட்டார்.
ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் அந்தப் பாறையில் விவேகானந்தர் தவமிருந்ததை ஒப்புக்கொள்ளக்கூடியவராக இருந்தார். நிச்சயமாக அது சேவியர் பாறையல்ல. விவேகானந்தர் பாறைதான். வேண்டுமானால் ஒரு பலகை வைக்கலாம். இங்கே விவேகானந்தர் வந்தார். தவமிருந்தார். அவ்வளவுதான். வேறொன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
*
எனவே விவேகானந்தர் நினைவுச்சின்னக் குழுவில் இருந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் விஷயத்தைத் தம் தலைவருக்கு எடுத்துச் சென்றார்கள். எப்படியாவது பாறையில் விவேகானந்தருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைத்தாக வேண்டும். கிறிஸ்தவர்கள் பிரச்னை செய்கிறார்கள். கோயில் நிர்வாகம் குறுக்கே நிற்கிறது. முதலமைச்சரும் ஒத்துழைப்பதாயில்லை. அனைத்தையும் மீறி நினைவுச் சின்னம் எழுப்பப்படவேண்டும். ஒரு வழி சொல்லுங்கள்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் அப்போதைய தலைவர் கோல்வால்கர், ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்ப முடிவு செய்தார். ரானடே, அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்தியப் பொதுச்செயலாளர். தமிழகத்தைப் பற்றியோ, தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்தோ, கன்னியாகுமரி மாவட்டத்தின் மதச்சிடுக்குகள் குறித்தோ அவருக்கு ஒன்றும் தெரியாது. அவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்.
விவேகானந்தருக்காகக் கன்னியாகுமரியில் ரானடே ஒரு கரசேவையைத் தொடங்க உத்தேசிப்பாரா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் வைத்திருப்பாரா?
குமரி மக்கள் காத்திருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் அதைவிட ஆர்வமுடன் காத்திருந்தார்கள்.
ரானடே அமைதியாக அமர்ந்து பாறை குறித்த அனைத்து வழக்கு விவகாரங்களையும் அது தொடர்பான அறிக்கைகளையும் அனைத்துத் தரப்பு வாதங்களையும் விரிவாகப் படித்தார். அன்றைய சூழ்நிலையில் பாறையில் விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் கூடாது என்று தீவிரமாகச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் தமிழக முதல்வர் பக்தவத்சலம். இன்னொருவர் ஹுமாயூன் கபீர். அன்றைய கலாசாரத்துறை மத்திய அமைச்சர்.
சரியான எதிர்ப்பாளர்கள்தாம். மாநில முதல்வரும் மாற்று மதத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரும். சரி, பரவாயில்லை. பார்த்துவிடலாம் என்று ரானடே முதலில் கல்கத்தாவுக்குப் போனார். அது ஹுமாயூன் கபீரின் தொகுதி. கல்கத்தாவில் இருந்து வெளிவரும் அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்களையும் அவர் சந்தித்தார்.
பிரச்னை இதுதான். வங்கத்தின் தங்கமான விவேகானந்தருக்குக் குமரி முனையில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதை உங்கள் வங்காளத்து எம்.பியும் மத்திய அமைச்சருமான ஒருவர் எதிர்க்கிறார். எனவே இது குமரி மக்களின் பிரச்னையல்ல. உங்களுடைய பிரச்னை.
அந்த புத்திசாலித்தனம் வேலை செய்தது. மேற்கு வங்கப் பத்திரிகைகள் அனைத்தும் ஹுமாயூன் கபீரை விமரிசித்து எழுதின. அமைச்சர் பயந்துவிட்டார். நினைவுச் சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் கெடும் என்ற அர்த்தத்தில்தான் நான் சொன்னேன், அதற்குப் பிரச்னையில்லை என்றால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.
அடுத்தவர் பக்தவத்சலம். முதல்வர். மாநிலத்தின் அமைதி அவருக்கு முக்கியம். ஒரு மதக்கலவரத்தைத் தவிர்க்கும் நல்ல நோக்கம்தான். ஆனால் விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அவசியம். தவிரவும் அதைச் செய்யாமல் விடுத்தால் பாறையைக் கிறிஸ்தவர்கள் அபகரித்துவிடுவார்கள்.
ரானடே, லால் பகதூர் சாஸ்திரியிடம் பேசினார். சாஸ்திரியை உதவச் சொல்லிக் கேட்டார். நீங்கள் நேருவிடம் சொல்லி, பக்தவத்சலத்தைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும்.
மறுபுறம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தேடித்தேடி விவேகானந்தர் நினைவுச் சின்னம் அமைக்க அவர்களது சம்மதத்தைப் பெறும் விதமாக ஒரு கையெழுத்து இயக்கத்தையும் தனி மனிதராக நடத்தினார். அத்தனை பேரும் ஆதரிப்பதை பக்தவத்சலம் ஒருத்தர் எதிர்த்துவிடுவாரா? பார்த்துவிடலாம்.
அதோடு அவர் நிறுத்தவில்லை. கன்னியாகுமரி முக்கியஸ்தர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் மட்டும் இருந்த நினைவுச் சின்ன கமிட்டியை விஸ்தரிக்க முடிவு செய்தார். தி.மு.க. தலைவர் அண்ணாதுரையைச் சந்தித்தார். அவரை கமிட்டிக்குள் இழுத்தார். காங்கிரஸ்காரர்களுடன் பேசினார். அவர்களையும் அழைத்தார். கம்யூனிஸ்டுகளை நாடினார். உச்சக்கட்டம், ஜோதிபாசுவிடம் போய் நினைவுச் சின்னம் அமைக்க நன்கொடை கேட்டது.
‘நான் எப்படி விவேகானந்தருக்கு நினைவாலயம் அமைக்க நன்கொடை தருவேன்? என் கட்சிக்கொள்கை இடம் தராது’ என்று அவர் சொன்னபோது, உங்கள் மனைவி கம்யூனிஸ்ட் கட்சியில்இல்லையே, அவரை இழுத்துவிடுங்கள் என்று கொக்கிபோட்டு இழுத்தார். பணக்கார பிர்லாக்களைப் பேசிப்பேசி மசியவைத்தார். கிறிஸ்தவர்கள் மிகுந்த நாகாலாந்து மாநிலத்துக்குப் போய், முதலமைச்சரிடம் பேசி மக்களிடம் பணம் வசூலிக்க ஒப்புக்கொள்ள வைத்தார்.
ஒரு விஷயம். நாகாலாந்து மக்களுக்கு விவேகானந்தரைப் பற்றி அப்போது ஒன்றுமே தெரியாது. பெயர்கூடக் கேள்விப்பட்டதில்லை. ‘வெறும் ஆயிரம் ரூபாய் வசூலானால் போதும். எண்ணிக்கையல்ல, அவர்களது பங்களிப்புதான் முக்கியம்’ என்றார் ரானடே.
விவேகானந்தர் என்னும் சன்னியாசியை, ஹிந்து மதத் துறவியாக அல்லாமல், இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றாகக் காட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சி அது. பல்வேறு கட்சிகள், பல்வேறு கொள்கைகள், பல்வேறு கோஷங்கள், பல்வேறு கருத்தியல் நிலைபாடுகள்.
ஆனால் ஏக்நாத் ரானடே என்னும் ஆர்.எஸ்.எஸ்.காரரால், தனி மனிதராக அத்தனைத் தரப்பையும் சமாளித்து, கன்னியாகுமரி கிறிஸ்தவர்களின் அதிருப்தியையும் சரி செய்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல் – திட்டமிட்டதைவிடப் பெரிய அளவில் குமரிக் கடலில் விவேகானந்தருக்கு மாபெரும் நினைவாலயம் எழுப்ப முடிந்தது.
*
பாறையின் இடத்தில் மசூதி. கிறிஸ்தவர்களின் இடத்தில் முஸ்லிம்கள். ரானடேவின் இடத்தில் அத்வானியும் வாஜ்பாயும் பரிவாரக் கூட்டங்களும்.
சந்தேகமில்லை. அயோத்தி, ஆர்.எஸ்.எஸ்ஸைப் பொறுத்தவரை ஒரு பரிமாண வீழ்ச்சி.