பிகார் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல்கள் அக்டோபர் 21-ம் தேதி தொடங்கி நவம்பர் 20 வரை ஆறு கட்டங்களாக நடைபெற உள்ளது. 243 தொகுதிகளின் 56,493 வாக்குச் சாவடிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை 5,50,88,402 வாக்காளர்கள் நிர்ணயிக்கப் போகிறார்கள்.
இந்தியாவில் வறட்சி மற்றும் வறுமை மிகுந்த மாநிலமாக எப்போதும் அடையாளம் காணப்படுவது பிகார். அடிப்படைக் கல்வி, தொழிற்கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிய மாநிலம் இது. எது எப்படி இருந்தாலும் தேசிய அளவில் ஐஏஎஸ் மற்றும் ஐஐடி தேர்வுகளில் பிகார் மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் பலமுறை முதலிடம் பெற்று வருகிறார்கள். இந்த நாட்டின் மென்பொருள் துறை வளர்ச்சியில் பிகார் மாநிலத்தின் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு மிகவும் பெருமைக்குரிய ஒன்று. அதே போல, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் தச்சுவேலை, கட்டட வேலை, தையல் வேலை, வாகனங்கள் பழுதுபார்த்தல் போன்ற அடிப்படையான, மிகவும் முக்கியமான வேலைகளில் மிகவும் திறமையுடன் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு வருகிறவர்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள். எண்பதுகளில் டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் நான் பணியில் சேர்ந்தபோது அரசுத் துறையின் பல மேலதிகாரிகள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதேபோல அரசுத்துறையின் தொழிற்சங்கங்களில் பிகாரிகள்தான் தூள் கிளப்பி வந்தார்கள். அரசுப்பணி தொடர்பான சட்டநுணுக்கங்களில் அவர்களுடைய ஞானம் மிகவும் அபாரமாக இருக்கும். கல்வித் துறையிலும் அபாரமான பங்களிப்பை நல்கியவர்கள் பிகாரி பாபுக்கள். டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் தமிழர்களுக்கு அடுத்து வெற்றிகரமாகச் செயல்படுகிறவர்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே.
பிகாருக்கு வெளியில் பல துறைகளிலும் மிக அற்புதமான பங்களிப்பை வழங்கி வருகிறவர்கள் பிகாரிகள். மூளை சார்ந்த பணிகள் மட்டுமல்லாது, உடலுழைப்பு சார்ந்த கட்டட வேலை செய்பவர்கள், ரிக்ஷா வண்டியோட்டிகள், கூலித் தொழிலாளிகள் போன்றவர்களில், டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் அதிகமான அளவில் உள்ளவர்கள் பிகாரிகளே.
ஆனால் என்ன கருமாந்திரமோ, அந்த மாநிலம் மட்டும் பல ஆண்டுகளாக வறுமையிலும் வளர்ச்சியின்மையிலும் முன்னணியில் இருக்கிறது. ஊழலிலும் வன்முறையிலும் முன்னணியில் நிற்கிறது. இந்த எழவைத் தாங்க முடியாமல் மூன்றில் ஒரு பங்கு பிகாரிகள் தங்கள் மாநிலத்துக்கு வெளியில் வசிப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.
பிகார் மாநிலம் ஆள்கடத்தல், பணப்பறிப்பு போன்ற குற்றங்களில் தேசிய அளவில் முதலிடம் பெற்றிருந்தது. இதனால் அந்த மாநிலத்தின் சிறுதொழில் முகவர்களும் மற்ற பெரும் தனவந்தர்களும் அங்கிருந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தலைதெறிக்க மற்ற மாநிலங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். மிகப் பெரிய செல்வந்தர்கள்கூடத் தங்கள் செல்வ நிலையை வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ளத் தயங்குவார்கள். இந்திய நகரங்கள் அனைத்திலும் விதம் விதமான சொகுசுக்கார்கள் பவனி வந்துகொண்டிருந்தபோது பாட்னா போன்ற பெரிய நகரங்களில் மாருதி 800, அம்பாசிடர் போன்ற சாதாரண கார்களில் வெளியே வருவதையே பாதுகாப்பாகக் கருதினார்கள். பெரிய கார்களில் இரவு நேரங்களில் வெளியே கிளம்புகிறவர்கள் தங்கள் கார்களுடன் அல்லது உயிருடன் வீடு திரும்புவது சற்றுக் கடினமான காரியமாக இருந்தது. இந்த நிலையில் பெரிய தொழில் நிறுவனங்கள் இந்த மாநிலத்தில் தொழிலைத் தொடங்குவது என்பது தூரத்துக் கனவாகவே இருந்திருக்கிறது.
லாலுவும் அவர் மனைவி ராப்ரியும் இந்த மாநிலத்தை ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். 1990-ல் இருந்து 1997 வரை லாலுவின் நேரடி ஆட்சியில் இருந்தது பிகார். மாட்டுத் தீவன ஊழலில் பிரும்மாண்டமாகக் குற்றம் சாட்டப்பட்டு, லாலு பதவி விலக நேர்ந்தபின், அவர் மனைவி ராப்ரி தேவி முதல்வராகத் தொடர்ந்தார். இடையில் மார்ச் 3, 2000-லிருந்து மார்ச் 7, 2000 வரை ஏழு நாட்களுக்கு நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். 2005-ல் மீண்டும் முதல்வரானார் நிதிஷ் குமார்.
இடையில் லாலு மைய அரசின் ஜோதியில் ஐக்கியமானார்.
2005-ல் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார் பல முன்னேற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்தார். மாநிலத்தை விட்டு வெளியேறிய பிகாரிகள் மீண்டும் பிகாருக்குத் திரும்பி வந்து தொழில் தொடங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தொழில் துறைக்குப் பல சலுகைகளை அறிவித்தார். ஜனவரி 2006-ல் இருந்து செப்டம்பர் 2010 வரை சுமார் 53,600 கிரிமினல் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகள் முடிக்கப்பட்டு, அவர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 45,000 பஹூபலிக்கள் என்று சொல்லக்கூடிய அரசியல் குண்டர்கள் சிறையில் இருக்கிறார்கள். லாலு மற்றும் ராப்ரியின் ஆட்சியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட குண்டர்களும் வன்முறையாளர்களும் கட்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இத்தனை இருந்தும் இன்னும் பிகார் பக்கம் எட்டிப்பார்க்க பல தொழில்முனைவர்களும் மென்பொருட்களில் முதலீடு செய்பவர்களும் தயங்குகிறார்கள். முன்பு நேதாகிரி என்று சொல்லக்கூடிய அரசியல் குண்டர்களின் கைகளில் இருந்த அதிகாரம் இப்போது பாபுகிரி என்று சொல்லப்படும் அதிகாரிகளின் கைகளில் மாறிவிட்டது. எனவே முதலீடு செய்பவர்களுக்குச் சாதகமான சூழ்நிலை இந்த மாநிலத்தில் இன்னும் முழுமையாக வரவில்லை என்றுதான் தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்கிறார்கள்.
இதற்கான அடிப்படையான காரணமாக அந்த மாநிலத்தில் எந்த ஆட்சியிலும் விசுவரூபம் எடுத்து வளர்ந்திருக்கும், அரசு மற்றும் அதிகார மட்டத்தில் உலவும் ஊழல்தான் என்றும் சொல்கிறார்கள். நிதீஷ் முதல்வரானபிறகு கிடைத்த ஒரே ஆறுதல் என்னவென்றால் அடங்கிப்போன ரவுடிகளின் சாம்ராஜ்யங்களும் சற்று பாதுகாப்பான இரவு நேரப் பாட்னா சாலைகளும்தான் என்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் முக்கியமான போட்டி என்பது நிதிஷ் குமாருக்கும் லாலுவுக்கும் இடையில்தான்.
நிதிஷ் குமாரின் ஜனதா தளத்தை பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கிறது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தை இடதுசாரிக்கட்சிகளும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனதந்திர பார்ட்டியும் ஆதரிக்கின்றன. காங்கிரஸ் யாருடனும் கூட்டணி வைக்காது தனித்துப் போட்டியிடுகிறது. நேற்று மன்மோகன் சிங்கே தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். ராகுல் காந்தியும் மாநிலம் முழுதும் சுற்றுகிறார்.
ஒரு காலத்தில் பிகார் மாநிலத்தில் காங்கிரஸ், மேல்ஜாதியினரின் கட்சியாக அடையாளம் காணப்பட்டு வந்தது. இப்போது முஸ்லிம்களின் ஆதரவார்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கிறது காங்கிரஸ். தற்போது வெளியிட உள்ள அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலும் முஸ்லிம்களின் மதரஸாக்களில் கல்விச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துவதாகவும், உருது மொழி மேம்பாட்டுக்கான திட்டங்களை அறிமுகப்படுத்தப்போவதாகவும் அறிவிக்கப்போகிறது காங்கிரஸ். அந்த மாநிலத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிகார நாற்காலியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்களின்மீது அபரிமிதமான அன்பு பொங்கி வழிகிறது. அயோத்தி சர்ச்சை தொடர்பான தீர்ப்புக்குப்பிறகு இந்த அன்பு இன்னும் தீவிரமடைந்துள்ளது. உயர்சாதி இந்துக்களின் வாக்கும் முஸ்லிம்களின் வாக்கும் இணைந்து ஏதாவது மாயாஜாலத்தை நிகழ்த்தும் பட்சத்தில், காங்கிரஸ் சில தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் லாலு, நிதிஷ் என்று பிரிந்துபோக இருக்கும் முஸ்லிம் வாக்கு காங்கிரசுக்கு எத்தனை தூரம் உதவும் என்று இப்போதைக்கு சொல்வது சற்றுக் கடினம்.
முஸ்லிம்களின் வாக்குகளை லாலுவின் கட்சி பெருமளவு கைக்குள் வைத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் நிதிஷ் குமாரின் ஜனதா தளத்துக்கு முஸ்லிம்கள் வாக்கு கிட்டுவது சற்று கடினம்தான். ஆனாலும் அவர் இந்த ஐந்தாண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டினையே எடுத்திருப்பதால், ஒரு சிறிய பகுதி முஸ்லிம் வாக்கு அவர் பக்கம் போக வாய்ப்பு இருக்கிறது. நிதிஷ் தன்னுடைய இனமான கும்ரி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள டோபிக்கள், முஜஹர், பஸ்ஸி போன்றோரின் வாக்கு வங்கிகளைப் பெருமளவில் நம்பி இருக்கிறார். முஸ்லிம்களில் ஒரு பகுதியினரின் வாக்குகளைக் கருத்தில் வைத்து நரேந்திர மோடியை பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பிகாரின் கோஸி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அழிவு நிவாரண நிதிக்காக மோடியின் குஜராத் அரசு அனுப்பிய ஐந்து கோடி ரூபாய்க் காசோலையைத் திருப்பி அனுப்பிவிட்டார் நிதிஷ். இதுநாள்வரை அத்வானியுடன் ஒரே மேடையில் தோன்றுவதை அவர் தவிர்த்து வருகிறார். இவை அனைத்தையும் மீறி Marriage of Convenience என்கிற அளவில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா தளத்தின் தேர்தல் நேர உறவு தொடர்ந்து வருகிறது.
லாலு தன்னுடைய பலமாக அவருடைய ஜாதியினரான யாதவ்கள் மற்றும் அவருக்கு ஏற்கெனவே ஆதரவு அளித்து வரும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நம்பி இருக்கிறார். ராம் விலாஸ் பாஸ்வான் கொண்டுவரும் தலித் ஓட்டுகளும் தன்னைக் கைவிடாது என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்.
இந்தத் தேர்தலின் நாயகராகவும் முதல்வராகவும் ஊடகங்களால் வர்ணிக்கப்படும் நிதிஷ் குமார், இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை என்கிற விஷயம் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும். ஏற்கெனவே மேலவை உறுப்பினராக இருந்து, முதல்வர் பதவி வகித்த நிதிஷ், தேர்தலுக்குப் பிறகும் அப்படியே தொடரும் திட்டத்தை வைத்திருக்கிறார்.
இதனைத் தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்ட லாலு, நிதிஷ் பாபு தேர்தலைப் பார்த்து மிரண்டுபோயிருக்கிறார் என்று மேடைக்கு மேடை நமுட்டுச் சிரிப்புடன் நக்கல் அடிக்கிறார். ஆனால் அவரும் தேர்தலில் நிற்கவில்லை! ராப்ரி தேவி அம்மையார், சோனேபூர் மற்றும் ரகேபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவை இரண்டிலும் அம்மையார் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டியதும், இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்து, அந்தத் தொகுதியில் லாலு நிற்பார் என்று டெல்லியில் பேசிக்கொள்கிறார்கள்.
தனியாகப் போட்டியிடும் காங்கிரஸ், நிதிஷை மட்டுமே குறிவைத்துத் தன்னுடைய தாக்குதலை முன்வைக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மாநிலத்தை எந்த வகையிலும் முன்னேற்றத்தின் பாதையில் கொண்டுசெல்லவில்லை; மைய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டை சரியான வகையில் மக்களுக்காகச் செலவு செய்யவில்லை என்று பிரதமரும் ராகுல் காந்தியும் எழுதி வைத்துக்கொண்டு பேசுவதுபோல ஒப்பிக்கிறார்கள். ஆனால் நிதிஷ் இதற்கு அசரவில்லை. லாலு மற்றும் ராப்ரியின் பதினைந்து ஆண்டு கால ஊழல் ஆட்சியில் 22 காங்கிரஸ் அமைச்சர்கள் பங்கேற்று இருந்தார்கள் என்றும், தீவன ஊழல் போன்ற பிரும்மாண்டமான ஊழல் நடைபெற்ற ஆட்சியில் பங்கேற்றது காங்கிரஸ் என்றும் பதிலுக்கு வெளுக்கிறார் நிதிஷ்.
1999-ல் ராப்ரி முதல்வராக இருந்தார், அப்போது மிகவும் பிரும்மாண்டமான வகையில் அவருடைய மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திருமணத்துக்கு வருகை தந்த பிரமுகர்களின் வசதிக்காக பாட்னாவின் மிதிலா மோட்டார்ஸ் என்னும் மாருதி ஷோரூமில் நுழைந்து மிக விலை உயர்ந்த பல கார்களை லாலுவின் மகன் குண்டர்களின் துணையுடன் ஓட்டிச் சென்று விட்டார் என்றும் அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஷோரூமை மூடிவிட்டு, பிகாரை விட்டே ஓடிவிட்டார் என்றும் அந்த நேரத்தில் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தல் ஓர் உண்மையான மானப்பிரச்னையாக மாறிப்போயிருக்கிறது. அதன் தலைவர் நிதின் கட்கரி தலைவராகப் பதவியேற்றதும் எந்த வகையிலும் அவர்கள் வெற்றி என்கிற வார்த்தையைக் கேள்விப்படவில்லை. இந்தத் தேர்தலில் அவர்கள் சார்ந்த கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்று பதட்டத்துடன் இருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் வாக்கு, பெருவாரியான ஜாதியான யாதவ்களின் வாக்கு மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் ஆதரவில் கிட்டும் தலித் வாக்குகளின் பலத்தில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் சவால் விடுகிறது. இதற்கு எதிராக நிதிஷ் குமார் வைத்திருப்பது கடந்த ஐந்தாண்டுகளாக அந்த மாநிலத்தில் பல துறைகளில் வெளிப்படையாகக் கவனத்துக்கு வந்த முன்னேற்றங்கள் மட்டுமே. ஏற்கெனவே சொன்னதுபோல, அரசியல் குண்டர்களின் ராஜ்ஜியத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தது, பிகார் மாநிலத்தைவிட்டு ஓடத்தொடங்கிய முதலீட்டாளர்களை மீண்டும் வரவழைக்க முயன்றது, பாதுகாப்பான இரவு நேரச் சாலைகள், நக்ஸலைட்டுகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தது, பல புதிய தொழிற்சாலைகள் மற்றும் மொபைல் நிறுவனங்களை மீண்டும் பிகாருக்கு அழைத்து வந்து வியாபாரத்தைத் தொடங்கவைத்தது போன்ற சில விஷயங்களை வைத்து லாலு கோஷ்டியினரின் ராட்சசப் போட்டியை நிதிஷ் குமார் சமாளித்தாகவேண்டிய நிலை. அவரளவில் அவர் நிறையவே செய்து வருகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக பிகார் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
டெல்லியில் உள்ள பிகாரிகளில் பலரும் நிதிஷ் மீண்டும் தங்கள் மாநிலத்துக்கு முதல்வராக வருவது அந்த மாநிலத்தை வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல உதவும் என்றுதான் சொல்கிறார்கள்.
National Election Watch (NEW) என்னும் தன்னார்வ அமைப்பு வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையின் அடிப்டையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களில் 25 சதவிகித்தினர் பயங்கரக் குற்றப் பின்னணி கொண்ட கிரிமினல் குற்றவாளிகள் என்று அறிவித்து இருக்கிறது.
2005-ல் நடைபெற்ற பிகார் சட்டசபைத் தேர்தலில் 46% வாக்குகள் மட்டுமே பதிவாகின. எனவே இந்தத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கவேண்டிய பொதுமக்களின் கடமையை வலியுறுத்த டாக்டர் அப்துல் கலாம், மஹேந்திர சிங் தோனி போன்றவர்களை முன்வைத்து காட்சி ஊடகங்களில் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.
ஆனால் ஜாதிய அரசியலும் ஊழலும் மேலாங்கி நிற்கும் பிகார் போன்ற ஒரு மாநிலத்தின் அரசியலில், ‘இதெல்லாம் சகஜமப்பா’ என்று டெல்லியின் அரசியல் பண்டிதர்கள் தெய்வீகமாகப் புன்னகைக்கிறார்கள்...