Friday, October 22, 2010

எந்திரன் review


டெல்லி எருமை என்று திட்டினால் கோபம் வரும், அதையே கொஞ்சம் மாற்றி பசு போல என்று சொன்னால் பெருமையாக நினைத்துக்கொள்வார்கள் என்பார்கள். அதேபோல, காதில் பூ சுற்றிப் படம் பார்க்கச் சொன்னால் கோபப்படுவார்கள். அதையே அறிவியல் புனைகதை என்று சொல்லிப் பார்க்கச் சொன்னால், அந்தப் படம் நன்றாகவும்  இருந்துவிட்டால், பெருமையாகப் பார்த்துவிட்டுப் போவார்கள். எந்திரன்அறிவியல் புனைகதையின் வழியே நம் காதில் பூ சுற்றுகிறது. இதுவரை ஆங்கிலப் படங்கள் சுற்றி வந்த அதே பூவை ஒரு தமிழ்ப்படம் சுற்றுகிறது. அது நமக்குத் தெந்திருந்தும், வியப்பு ஏற்படாமலில்லை. ஏனென்றால் 150 கோடி பெறுமானமுள்ள பூ இது.
பொதுவாகவே ரஜினியின் திரைப்படங்களில் அவர் தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்டாகவும் சூப்பர்மேனாகவும்தான் வலம் வருவார். ஒரு அடி அடித்தால் பத்து பேர் எப்படி எகிறி விழுவார்கள் என்று சீரிய திரை விமர்சகர்களும் ஆய்வாளர்களும் ரஜினியை மட்டும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அறிவியல் புனைகதை என்று சொல்லி அதற்கு சாமர்த்தியமான ஓர் அடித்தளத்தைக் கொடுத்து அவர்கள் வாயையும் அடைத்துவிட்டார் ஷங்கர். ஆனாலும் அவர்கள் சும்மா இருக்கப்போவதில்லை. இப்படத்தில் இருக்கும் அறிவியல் ஓட்டைகளையும், கலாசாரப் பழமைவாதத்தையும், சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் காட்சிகளையும் எப்படியாவது கண்டுபிடித்து எழுதுவார்கள். நாம் ரோஜாவை ரோஜாவாக அணுகுவோம்.
அறிவியல் புனைகதை என்னும் அடித்தளத்தை அமைத்துக்கொண்டு, தனது ஆதர்ச சூப்பர் ஹீரோவான ரஜினியை என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ அதையெல்லாம் செய்து பார்க்க ஆசை கொண்ட ஷங்கர், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் அந்த ஆசை கொஞ்சம் மீறிப்போய், விட்டலாச்சாரியா படங்களுக்கு அருகில் சென்றாலும்கூட, தொழில்நுட்ப வல்லமையைக் கொண்டு அதனைச் சமன் செய்கிறார். பொதுவாக இதைப் போன்ற படங்களையெல்லாம் கமலை வைத்து மட்டுமே பார்த்துப் பழகிப் போன ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இப்படி வருவதைப் பார்த்து எந்தக் காட்சியில் கை தட்டவேண்டும் என்பதைக் கூட அறியாமல் மெய்ம்மறந்து பார்க்கிறார்கள்.

ஏற்கெனவே பல நேர்காணல்களில் ரஜினி சொன்னது போல எதிர்பாத்திரம் அவரை அதிகம் ஈர்க்கிறது என்பதை இப்படத்திலும் காணமுடிகிறது. கடைசி 45 நிமிடங்கள் ரஜினி எடுக்கும் விஸ்வரூபம் அசரச் செய்கிறது. ரஜினிக்கு இணையாக அக்காட்சிகளில் தொழில்நுட்பமும் இசையும் கொள்ளும் எழுச்சி, நாம் ஓர் இந்தியப் படத்தை, அதுவும் தமிழ்ப்படத்தைப் பார்க்கிறோமா அல்லது அமெரிக்கத் தரத்திலான ஹாலிவுட் படத்தைப் பார்க்கிறோமா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது.
தங்களது படங்களில் வரும் பாடல் காட்சிகளில் கிராபிக்ஸை ஊறுகாய் போல மட்டுமே தமிழ் இயக்குநர்களுக்குப் பயன்படுத்தத் தெரியும் என்ற வசைச்சொல் பல காலமாக இருந்தது வந்தது. அதனை ஓரளவு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போக்கியது. இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில், கிராபிக்ஸில் பெரிய சாதனையையே நிகழ்த்தியிருக்கிறது.
பெரிதினும் பெரிது கேள் என்பதை ஷங்கர் தன் வழியில் புரிந்துகொண்டிருக்கிறார். இரண்டு ரஜினி போதாது என்று நினைத்தாரோ என்னவோ, கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்குத் திரையெங்கும் ரஜினியின் உருவங்கள். ஒரு ரஜினி ரசிகனுக்கு இது வாழ்நாள் ட்ரீட்டாக இருக்கும். அத்தனை ரஜினியைப் பார்த்து ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மூழ்கிப் போன நான் இன்னும் அதே நினைப்பிலேயே இருக்கிறேன்.
திரைக்கதையின் வேகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஷங்கர் இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நிர்வாணமான பெண்ணை ரோபோ தூக்கி வரும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு. ரோபோவின் நம்பகத்தன்மை நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காட்சி அது. அதேபோல் இன்னொரு கவிதையான காட்சி என்றால், ரோபோ கவிதை சொல்லும் காட்சி.
படத்தில் சில காட்சிகள் தேவையில்லாமல் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கொசு வரும் காட்சி, ஐஸ்வர்யா ராயை ரோபோ கடத்தும்போது வரும் கார் சேஸிங் காட்சி, கிளிமாஞ்சாரோ பாடலுக்கு முன்னால் கலாபவன் மணி வரும் காட்சி போன்றவை. அதேபோல் நம்மை அசர வைக்கும் காட்சிகளும் உண்டு. திரையெங்கும் ரஜினி உருவங்கள் ஆக்கிரமிக்கும் காட்சி, நல்ல ரோபோவாக ரஜினி விகல்பமில்லாமல் நடிக்கும் காட்சிகள் போன்றவை. அதிலும் மறக்கமுடியாத ஓரிடம், ரஜினியின் உடலைச் சுற்றி அம்மன் போல வேல் கத்தி சூலம் போன்றவை நிற்கும் காட்சி. ஷங்கரின் கற்பனை உச்சத்தைத் தொட்ட இடம் இது.
பெரிய மாஸ் ஓப்பனிங் இல்லாமல், ஓப்பனிங் பாடல் இல்லாமல், பஞ்ச் டயலாகுகள் இல்லாமல் இந்நாட்களில் ஒரு ரஜினி படம் வரமுடியும் என நிரூபித்திருக்கிறது இப்படம். வில்லனை எதிர்த்து சண்டை போடாமல் ரஜினி ஓடும் காட்சியும் கூட இதே ரகம்தான். எல்லாவற்றையும் ரஜினி ரசிகர்களுக்காக வட்டியும் முதலுமாகச் செய்து தீர்க்கிறார் ரோபோ ரஜினி.
ரோபோ கெட்டவனாக மாறும்போது, மாறும் ரஜினியின் நிறமும் அவரது உடல்மொழியும் மிரட்டுகின்றன. ரஜினியை சூப்பர் மேனாகப் பார்க்கும் சிறுவர்கள் இந்தப் படத்தை தங்கள் வாழ்நாள் முழுக்க மறக்காமல் வைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
அங்கங்கே தனித்துத் தெரியும் பளிச் வசனங்கள் சுஜாதாவை நினைவூட்டுகின்றன. ரோபோஸெப்பியன்ஸ், நக்கல்-நிக்கல் போன்றவை சில உதாரணங்கள். ரோபோவை அறிமுகப்படுத்தும் காட்சியில் சட்டென ஒரு ராகத்தைப் பாடும் ஒரு முதியவரும், கடவுள் இருக்காரா இல்லையா என ஒலிக்கும் குரலும் சந்தேகமேயின்றி சுஜாதாவேதான்.ஆர். ரகுமானின் இசையும், ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஓர் உலகத்தரமுள்ள திரைப்படத்துக்கு எப்படி ஒத்துழைக்கவேண்டுமோ அப்படி அமைந்திருக்கின்றன.
இதே படத்தில் கமல் நடித்திருந்தால் அது வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும். கூடவே கமலின் சில தன்முனைப்பு எரிச்சல்களும் சேர்ந்திருக்கும். இயக்குநரின் நடிகரான ரஜினி நடித்ததில், இப்படம் வேறொரு பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. கூடவே ரஜினியின் மாஸும் சேர்ந்துகொண்டதில், இப்படம் மிகப் பெரிய பிரம்மாண்டத்தைக் கண்முன் நிறுத்திவிட்டது.
மொத்தத்தில் எந்திரன்தி மாஸ்.

1 comment: