Monday, October 25, 2010

வேண்டாம் மெக்காலே... வரட்டும் புதிய விடிகாலை

இந்தியாவில் பிரிட்டிஷாரின் கல்விக் கொள்கையை அமல் செய்த மெக்காலே, பிரிட்டிஷ் பார்லிமென்டில் 1835 பிப்.2ம் தேதி ஓர் அறிக்கை சமர்ப்பித்தார்.
அதில் அவர், "நான் குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். இதுவரை ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் பார்க்கவில்லை. அவ்வளவு வளம் நிறைந்தது அந்நாடு. கலாசாரம் மற்றும் ஆன்மிக நெறி எனும் முதுகெலும்பை நாம் உடைக்காதவரை நல்ல ஒழுக்கம், நல்ல பண்பு இருக்கும் அந்நாட்டின் மக்களை நாம் எப்போதும் வெற்றி பெறுவது கடினம்.

ஆகவே, பழைய கல்வி அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றை மாற்றி, தங்களை விட வெளிநாடு மற்றும் ஆங்கிலம் ஆகியனதான் உயர்வானது என்பதை மனதில் புகுத்துவதன் மூலம் தங்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டையும் பாரம்பரிய கலாசாரத்தையும் இழக்கும் படியான கல்வித் திட்டத்தை நான் பரிந்துரைக்கிறேன். அதன் மூலம் நாம் எது போன்று அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோல் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களாக அவர்கள் மாறுவார்கள்' என்றார்.

இவ்வாறு புகுத்தப்பட்ட மெக்காலேயின் கல்வித் திட்டம் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டில் கலாசாரம், மதிப்பீடுகள் மற்றும் ஆன்மிக நெறிகளுக்குப் பெயர் எடுத்த இந்தியாவின் கல்வி முதுகெலும்பை முறிப்பதாக இருந்தது. நவீன கல்வி, நவீன தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவை நவீனம் என்ற பெயரில் இங்கு புகுத்தப்பட்டன. தற்போது அது "உலகமயமாக்கல்' என்று புதுப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இயற்கையான பலத்தை மீட்கவும், அதே சமயம் உயர்கல்வியில் நவீனத் தேவைகளை பூர்த்தி செய்யவும், 21ம் நூற்றாண்டில் அமல் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் உதவுகின்றன. குறிப்பாக 11வது திட்ட காலத்தில் மத்திய அரசு கல்விக்காக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியது. எனினும் இன்னும் சில விஷயங்களில் நாம் எதிர்பார்த்த தகுதியைப் பெறவில்லை.

2009 ஜூலையில் 483 பல்கலைக்கழகங்கள், 20 ஆயிரத்து 918 கல்லூரிகள் இருந்தன. 200910ல் 96 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசியக் கல்வி நிறுவனங்களும், 3 ஆயிரம் கல்லூரிகளும் உள்ளன. இந்நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிவாய்ந்த திறன் அடிப்படையிலான ஆசிரியர்கள் கிடைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

2007-08ம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழுவினரால் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 46 பல்கலைக்கழகங்களில் 44 சதவீத பேராசிரியர் 51 சதவீத இணைப்பேராசிரியர் மற்றும் 53 சதவீத விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது தெரியவந்தது. அதே போல், 985 கல்லூரிகளில் 18 சதவீத இணைப்பேராசிரியர்கள் மற்றும் 41 சதவீத விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது உள்ள நிலையில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவற்றை சேர்த்து 4.41 லட்சம் உயர்கல்வி ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். தற்போது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 5.1 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சர்வசிக்ச அபியான் திட்டத்தின்படி, 12 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் தேவையும் உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஆசிரியர் பணியிடங்களுக்கு வர்த்தக மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க முடிவு செய்தது.

இந்தியாவில் நாக் தரமதிப்பீடு தான் கல்வி நிறுவனங்களின் தகுதியை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி. இதுவரை நாக், 159 பல்கலைக்கழகங்கள் மற்றும் 4171 கல்லூரிகளையும் மட்டுமே தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 60 பல்கலைக் கழகங்கள் ( 37.7 சதவீதம்) மற்றும் 1796 கல்லூரிகள் (43சதவீதம்) மட்டுமே "' கிரேடு அந்தஸ்தை பெற்றுள்ளன. "' கிரேடு பெற்ற பல்கலைக்கழகங்களில் 40 சதவீதம் மத்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

29.4 சதவீதம் மாநில பல்கலைக்கழகங்கள். மற்றவை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழகத்தின் தரம், பல்கலைக்கழக ஆசிரியரின் தரத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. உயர் கல்வியில் திறமையான, தகுதி வாய்ந்த ஆசிரியர்களாலேயே பாடத்திட்டம் மற்றும் துணைப்பாடத் திட்டங்களில் சிறந்து விளங்க முடியும்.

இது போன்ற சிறப்பான உயர் கல்வியால் மட்டுமே சிறப்பான வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கான திறன் ஆகியவற்றை இளைஞர்களிடையே உருவாக்கும். இது தான் உலகமயமாக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் கலாசார பாரம்பரியம் மற்றும் மதிப்பீடுகளை பூர்த்தி செய்யும். கல்லூரி ஆகட்டும்; பல்கலைக்கழகமாகட்டும். உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை விட ஆசிரியர்களே முக்கியமானவர்கள்.