இந்தியாவுக்கு வெளிநாட்டவர் வருவதற்குக் காரணம் இந்தியாவில் மிகக் குறைவான, அவர்களுக்குக் கட்டுபடியான செலவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு நாடு திரும்பலாம் என்பதுதான் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அது மட்டுமே உண்மை அல்ல.
மாலத்தீவு, தாய்லாந்து போன்ற நாடுகள் முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியிருக்கின்றன. நிறையச் சலுகைகள் தருகின்றன. இருப்பினும்கூட, இந்தியாவுக்கு வெளிநாட்டவர் வருவதற்குக் காரணம் பாரதத்தின் தொன்மையும், பாரம்பரியமும், ஆன்மிகமும், பன்முகப்பட்ட மக்களின் பழகுமுறையும் கலாசாரமும்தான்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் அனைவரும் யுனெஸ்கோ அங்கீகரித்துள்ள பாரம்பரியச் சின்னங்களைத் தேடிச் சென்று பார்க்கின்றனர்.
அவர்களுக்கு நம் வரலாறு மீது தணியாத மோகம் இருக்கிறது. ஆகவேதான் வெளிநாட்டவர் வருகை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
2003-ம் ஆண்டில் (முதல் 10 மாதங்களின் கணக்கெடுப்பின்படி) 21.16 லட்சமாக இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2008-ல் 42 லட்சமாக உயர்ந்தது. 2009-ல் சிறிதளவு குறைந்தபோதிலும், மீண்டும் 2010-ம் ஆண்டில், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலும் 43.22 லட்சம் வெளிநாட்டவர் சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ளனர். இவர்கள் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு ரூ. 51,334 கோடி!
இதற்காக மகிழ்ச்சி அடையலாம் என்றால், சீனா குறித்து கிடைக்கும் தகவல், நமது மகிழ்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. அந்நாட்டில் சீன நெடுஞ்சுவரைக் காண்பதற்காக மட்டுமே ஆண்டுக்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் உலகம் முழுவதிலுமிருந்து வந்து செல்கிறார்கள். ஆனால் நமக்கோ, இந்தியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையே 43 லட்சம்தான்.
ஏன் இந்த நிலைமை என்றால், நாம் இன்னமும் நமது தொன்மைக்கும் பாரம்பரியச் சின்னங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரவில்லை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இந்தக்
குற்றச்சாட்டை இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் கே.கே. முகமது அண்மையில் கோழிக்கோட்டில், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாத்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசும்போது, ""வளர்ந்த நாடுகள் தரும் முக்கியத்துவத்தை நாம் நம்முடைய பாரம்பரியச் சின்னங்களுக்குத் தருவதில்லை. உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 28 இடங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தரும் முக்கியத்துவத்தைக் காணும்போது நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அன்னியச் செலாவணியாக இந்தியாவுக்கு ரூ. 51,334 கோடி கிடைக்கும் என்றால், அதில் ஒரு பகுதியை ஏன் பாரம்பரியச் சின்னங்களைப் பராமரித்தல் மற்றும் அங்கு சென்று வரும் வசதிகளை ஏற்படுத்துதல், அது தொடர்பான வரலாற்றுத் தகவல்களை உலகம் அறியவும், ஆர்வம் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது?கம்போடியாவில் உள்ள ஆங்குர்வாட் கோயிலின் சிதிலங்களைச் சரிசெய்து மீண்டும் அதை தற்போதுள்ள நிலையில் அமைத்துக் கொடுத்தவர்கள் இந்தியத் தொல்லியல் துறை வல்லுநர்கள்தான். இன்னும் நுட்பமாகப் பார்த்தால் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்தியாவில் இத்தகைய பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டுமானால் அரசு அதற்காக நிறையச் செலவிட வேண்டியிருக்கும். அதனால்தான் அரசு ஆர்வம் காட்டுவதில்லை.
அண்மையில் இத்தாலி நாட்டில் உள்ள பைசா கோபுரம் புதுப்பிக்கப்பட்டது. 830 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பைசா சாய்வு கோபுரத்தைப் புதுப்பிக்க அவர்கள் 8 ஆண்டு கால திட்டம் வகுத்து, சிறந்த வல்லுநர்களைத் தேர்வு செய்து, அதன் தொன்மை சிறிதும் குலையாமலும், அதற்குப் பழுது ஏற்படாத வகையிலும் சீரமைத்து, கடந்த மாதம்தான் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு அனுமதித்தார்கள். இங்கே அத்தகைய முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்றால், வருவாய் இழப்பு குறித்து யோசிக்கிறார்கள்.
இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஆக்ரா சென்று தாஜ்மகாலைப் பார்க்காமல் செல்வதில்லை. ஆனால், தாஜ்மகால் கடந்த 300 ஆண்டுகளில், தொழில்துறை மாசு காரணமாக அதன் வெள்ளை நிறப் பளிங்குக் கற்கள் தன் சுயவண்ணத்தில் குறைந்துவிட்டது. இதை வேதியியல் முறைப்படி புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக இருந்தாலும், இதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்கள். இப்போதுதான் தாஜ்மகாலுக்கு "ஃபேஷியல்' தரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அதாவது தாஜ்மகால் மீது களிமண் பூச்சு போட்டு, சில தினங்கள் கழித்து, பூசிய களிமண்ணைத் தூய்மைப்படுத்தப்பட்ட தண்ணீரால் கழுவும்போது அதன் பழைய வெண்மை நிறம் மீண்டும் கிடைக்கும் என்கிறார்கள். இதையும் ஒரே நேரத்தில் செய்யாமல் சிறுசிறு பகுதியாகத்தான் செய்யவிருக்கிறார்கள். குறைந்தபட்சம் இத்தகைய "ஃபேஷியல்' செய்யவாகிலும் இப்போது தோன்றியதே என்று மகிழ்ச்சி அடைய வேண்டியிருக்கிறது.
இந்தியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பதால், நம் பாரம்பரியச் சின்னங்களுக்கு எந்த லாபமும் கிடையாது. ஆனால் சேவைப் பிரிவுக்கு நிறையவே லாபம் கொட்டுகிறது.
சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்காக நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்கள் கட்ட வேண்டுமானால் சுற்றுலாத் துறை மூலம் நிறையச் சலுகைகள் அள்ளி அள்ளி வழங்கப்படுகின்றன. வரி கட்ட வேண்டியதில்லை. மானியம் கொடுக்கிறார்கள். ஆனால், எந்தப் பாரம்பரியச் சின்னம் வெளிநாட்டவரைக் கவர்கிறதோ அதற்குச் செலவழிக்கத் தயங்குகிறார்கள். திட்டத்தைத் தள்ளிப்போடுகிறார்கள்.
விமானப் போக்குவரத்தும், நட்சத்திர ஹோட்டல்களும், பெப்சி கோலாவும், உலகத் தரமான வாகனங்களும் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகையை உறுதி செய்துவிடாது. பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாப்பும், பராமரிப்பும், சுற்றுச்சூழலும்தான் அதைவிட முக்கியம் என்பதை நமது சுற்றுலாத்துறை ஏன் உணர மறுக்கிறது?
""பழமை பழமையென்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்தநிலை - கிளியே, பாமரர் ஏதறிவார்?"
No comments:
Post a Comment