ஓரு மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமையும் என்றால், அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு வானத்தின் கீழ் உள்ள எல்லா சலுகைகளும் கிடைத்து விடுகின்றன என்பது இன்றைய அரசியல் தலையெழுத்தாக இருக்கும்போது, பிகார் மாநிலத்தில், இந்தியாவே அதிசயப்படும் வகையில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்ற போதிலும், அவர் செய்திருக்கும் முதல் பணி எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்திருப்பதுதான்.
கடந்த ஆட்சியிலும் தானே முதல்வராக இருந்துள்ள நிலையில், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் ஊழல் நடப்பதால் இதை ரத்து செய்கிறேன் என்று சொன்னால், அது தன்னையும், தன் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் கறைப்படுத்துவது போல ஆகுமே என்கிற எண்ணம் இல்லாமல், உண்மையை வெளிப்படையாகச் சொல்லி, இந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளார்.
இதற்காக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்க இயலாத நிலையில், இதே நடைமுறையை நிதீஷ் குமார் சார்ந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அரசாளும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்று வஞ்சப்புகழ்ச்சியை மட்டுமே கொட்ட முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம் இந்தத் திட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மேம்பாடு அடைந்தார்களே தவிர, தொகுதி மேம்படவில்லை. இது பிகார் மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவோர் தங்கள் தொகுதிக்கான தேவைகளை அரசிடம் சொல்லி அல்லது சட்டப்பேரவையில் இதைப் பற்றிப் பேசி, அரசின் கவனத்தைத் திருப்பி, தொகுதிக்கான தேவையைப் பூர்த்தி செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் வெற்றிபெற்ற தொகுதிகளை ஏதோ மாற்றாந்தாய் பிள்ளைகளைப் போல கருதிக்கொண்டு, அங்கு எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செய்யாமல் தள்ளிப்போடுவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு மக்களிடத்தில் அதிருப்தி ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் திருப்திப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் தொகுதி மேம்பாட்டு நிதி.
இந்த நிதி ஆண்டுக்கு ரூ. 25 லட்சத்தில் தொடங்கி, இப்போது தமிழ்நாட்டில் 1.80 கோடியாகவும் (தொகுதிக்காக ரூ. 1.75 கோடி மற்றும் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் நலவாழ்வுக்காக) சில மாநிலங்களில் ரூ. 2 கோடி வரையிலும் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி மூன்று வகையாகச் செலவிடப்படுகிறது. முதலாவது, அவசியத் தேவை என்றில்லாத திட்டங்கள், இரண்டாவது, மக்கள் எளிதில் மறந்துபோய்விடக்கூடிய திட்டங்கள், மூன்றாவது, மக்களே குறைசொல்ல முடியாத திட்டங்கள்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் இந்த நிதி எதற்காக அதிகம் செலவிடப்பட்டுள்ளது என்று பார்த்தோமானால், புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கவும், பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கவும், ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஓர் ஊருக்குப் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவையே இல்லை என்றாலும்கூட, அங்கே பேருந்து நிலையம் அமைக்க கருத்துரு அனுப்பி, அதைக் கட்டி முடித்துவிடுவதில் குறியாக இருப்பார்கள். பேருந்து நிலையங்களில் கொட்டை எழுத்தில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது என்று விளம்பரப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் இதன் நோக்கம்.
அடுத்ததாக, பேருந்து நிறுத்த நிழற்குடை. உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் திடீர்திடீரென பேருந்து நிறுத்தங்களைத் தள்ளிப் போடுவார்கள். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் அங்கே கூரை வரும். பழைய பேருந்து நிறுத்தம் மிகவும் ஸ்திரமான நிலையில் இருந்தாலும், ஓரிரு ஆண்டுகள்கூட முடிந்திராவிட்டாலும் புதிய பேருந்து நிறுத்தம் அவசியமாக்கப்படும். பழைய நிழற்குடை பிச்சைக்காரர்கள் தங்குமிடமாக மாறிப்போகும். இதுவும் தான் ஏதோ மக்கள் தொண்டாற்றுவதுபோன்ற தோற்றத்தை உருவாக்க சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பயன்படுகிறது என்பதுதான் உண்மை.
மூன்றாவதாக, ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல். இதுபோன்ற மோசடியை வேறு எங்கும் பார்க்க முடியாது. அடிபம்புக்கு வெறும் வாஷர் போட்டாலே தண்ணீர் தாராளமாக வரும் என்றாலும், அதைச் செய்யாமல் அதைத் தண்ணீர் வராத குழாயாக கணக்குக் காட்டி, அதை ஆழப்படுத்தியதாகக் கணக்கு எழுதி, ரசீதும் தயார் செய்து, வாஷர் போட்டு, பெயின்ட் அடித்து, திறப்பு விழாவை போட்டோ சகிதம் நடத்துவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.
எத்தனை ஆழ்துளைக் கிணறுகளைத்தான் தண்ணீர் இல்லாதவை என்று சொல்வது? ஆகவே இப்போது இதில் புதிய உத்தியைப் புகுத்தியிருக்கிறார்கள். சிறு மின்விசை நீரேற்றியுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி கட்டும் உபாயத்தில் இறங்கிவிட்டார்கள்.
மூன்றாவது வகை - சாலை அமைக்கும் திட்டம். ஒரு மழை வந்தால்போதும், தார்ச்சாலை மண்சாலையாக மாறிவிடும். மழையைக் குற்றம் சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். சாலையின் தரம் சரியில்லாததால் இந்த நிலை என்பதைச் சொல்வதோ, ஒப்பந்ததாரைப் பொறுப்பேற்கச் செய்வதோ கிடையாது.
ஒரு புதிய மாநகராட்சிக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையத்துக்கு வரவேற்பு வளைவு அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு வளைவு ரூ. 5 லட்சம் செலவாகக்கூடியதா என்பதை விட்டுத்தள்ளுவோம். இந்த வரவேற்பு வளைவு மக்களுக்கு எந்த வகையில் பயன்தரக்கூடியது? அந்த எம்.எல்.ஏ.வின் பெயரை, பேருந்து நிலையத்தின் திறப்பு விழா கற்பலகையில் எழுதி வைத்தால் போதாதா?
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தொகுதி மேம்பாட்டு நிதியில் தாங்கள் செய்த நற்காரியங்கள் என்ன என்பதை பணியின் வகை, நிதி ஒதுக்கீடு, ஒப்பந்ததாரர் பெயர் என விரிவாகப் பட்டியலிட்டால், இதில் எத்தனை பணிகள் உண்மையாகவே மக்களுக்கு இன்றியமையாத தேவையாக இருந்தன அல்லது இன்றும் பயன்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதைச் செய்ய எம்.எல்.ஏ.க்கள் முன்வராவிட்டாலும், தகவல் அறியும் சட்டத்தில் எந்தவொரு குடிமகனும் அரசிடம் இத்தகைய பட்டியலைக் கேட்க முடியும். இந்தப் பட்டியலைப் பார்த்தால் ஒவ்வொரு குடிமகனும் பிகார் முதல்வரைப் பாராட்டுவான்.
பிகார் முதல்வரைப் பாராட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். அவரை ஏனைய முதல்வர்கள் பின்பற்றட்டுமே... செய்வார்களா?.
No comments:
Post a Comment