அமெரிக்காவில் ஏற்கெனவே உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாலும், அந்த அமைப்பை மேலும் சட்டரீதியில் வலுவுள்ளதாக மாற்றுவதற்கு ஜனவரி 4-ம் தேதி ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்தச் சட்டத்துக்கு "உணவுப் பாதுகாப்பு நவீனப்படுத்தல் சட்டம்' என்று பெயர்.
இந்தச் சட்டத்தின் மிகப்பெரும் பலமாகக் கருதப்படுவது, சரியில்லாத உணவுப் பொருள் அல்லது மருந்தைத் திரும்பப் பெறுமாறு உத்தரவு போட முடியும். இதுவரையிலும் அப்படியொரு உணவுப் பொருள், மனிதருக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கிறது என்று தெரியவரும்போது, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மட்டுமே வலியுறுத்த முடிந்தது. விற்பனை செய்யப்படும் கடைகளில் இந்த உணவுப் பொருள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் ஒட்டி நுகர்வோரை வாங்கவிடாமல் செய்துவிட முடிந்தது. இப்போது உத்தரவிட முடியும் என்பதுடன், அந்த நிறுவனம் தானே சந்தைக்குச் சென்று விற்பனை செய்த அனைத்தையும் திரும்பச் சேகரித்து வர வேண்டும். இல்லையானால் அபராதம், தண்டனை இரண்டும் உண்டு.
இரண்டாவதாக, சந்தையில் உள்ள உணவுப் பொருள்கள், மருந்துகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் மூலமாக மறுமதிப்பீடு செய்து, அதற்கேற்ப அனுமதி பெற்றாக வேண்டும். அதாவது, ஓர் அமெரிக்க நிறுவனம் எந்தவொரு உணவுப்பொருள் அல்லது மருந்துகளை இறக்குமதி செய்வதாக இருந்தாலும், அந்த இறக்குமதிப் பொருள் அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டிய கடப்பாடு, பொறுப்பு இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கு உண்டு.
மேலும், உணவுப்பொருள் அல்லது மருந்துகள் தயாரிக்க வாங்கப்படும் பொருள்கள் எங்கே, எப்போது வாங்கப்பட்டன, யாரால் தயாரிக்கப்பட்டன என்பது குறித்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு இனிமேல் அதிகாரம் உண்டு.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் 1.4 பில்லியன் டாலர் கூடுதல் செலவாகும் என்பதாலும், இந்தச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதால் அளவுக்கு அதிகமான நிபந்தனைகள்
சிறிய நிறுவனங்கள் மீது திணிக்கப்படுகிறது என்பதாலும், சிறு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும், எதிர்க்கட்சி தரப்பில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், இந்தச் சட்டத்துக்குப் பொதுமக்களிடமிருந்தும் மற்ற அமைப்புகளிடமிருந்தும் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
இத்தனைக்கும் சரியில்லாத உணவு, மருந்துகளால் சாகும் அமெரிக்கர் எண்ணிக்கை என்பது மிகமிகச் சொற்பம். திரும்பப்பெறும் வேண்டுகோளை நிறுவனங்கள் மறுத்தன என்பதும் நடந்ததில்லை. இருப்பினும்கூட அங்கே இத்தகைய கெடுபிடிகளை மேலும் இறுக்குகிறார்கள்.
ஆனால், இந்தியாவில் இத்தகைய சரியில்லாத, விஷமாகக்கூடிய உணவுப்பொருள், மருந்துகள் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை. இருக்கின்ற சட்டத்தைக் கொண்டு பல்வேறு சோதனைகள் நடத்த முடியும்; அதன் உற்பத்தியைத் தடுக்கவும் முடியும் என்றாலும் நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.
சில மாதங்களுக்கு முன்பு காலாவதியான மாத்திரைகள் விற்பனை தொடர்பாக மிகவும் பரபரப்பான செய்திகள், கைதுகள், நடவடிக்கைகள் என்று தமிழகமே களேபரமாக இருந்தது. ஆனால், அதன் பிறகு வழக்கம்போல எல்லாமும் மறக்கப்பட்டுவிட்டது. காலாவதி பிரச்னை காலாவதியாகிவிட்டது.
இதன் தொடர் நடவடிக்கையாக சில முக்கியமான, சங்கிலித் தொடர் மளிகைக் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி, தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாளுக்குள் பயன்படுத்த வேண்டும் என்கிற விவரம் இல்லாத விற்பனைப் பொருள்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். பின்னர் அந்த நடவடிக்கையும்கூட கனவாய், பழங்கதையாய் மெல்லக் கழிந்தது.
கறிக்கோழியின் முழு வளர்ச்சி 65 நாள்களில் ஏற்பட்டு விடுகிறது என்பதால்தான் "சிக்கன்-65' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தற்போது கோழி உணவிலும், ஊசி மூலம் செலுத்தப்படும் ஹார்மோன்கள் மூலம் வளர்ச்சியை 35 நாள்களில் துரிதப்படுத்தும் செயல்களில் பல கோழிப்பண்ணைகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இது மனிதருக்கும் மிகமிகக் கேடான, விஷமான, நோய்களை வரவழைக்கக்கூடிய மாமிச உணவு என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதன்பிறகும்கூட, சந்தையில் உள்ள கோழிகளைப் பறிமுதல் செய்து, அவை எத்தனை நாளில் முழு வளர்ச்சி பெற்றன, அத்தகைய ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய வேண்டும் என்கிற பொறுப்பைக் கையிலெடுக்க மத்திய, மாநில அரசுகள் தயங்குகின்றன.
சுகாதார அலுவலரால் சான்றளிக்கப்பட்ட ஆடுகள் மட்டும்தான் வெட்டப்பட்டு, இறைச்சிக் கடைக்கு வந்தாக வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பல இடங்களில் சுகாதார அலுவலரின் முத்திரை இல்லாத ஆடுகள் நிறையவே விற்பனை செய்யப்படுகின்றன.
இன்று தமிழர்கள் எய்தும் நோயின் பெரும்பகுதி பாதுகாப்பற்ற மாமிச உணவுகளால் உண்டாகின்றன என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
இறைச்சியின் நிலைமை இதுவென்றால், காய்கறிகளிலும் கட்டுப்பாடுகள் இல்லை. எந்தெந்தக் காய்கறிகளில் எந்த அளவுக்கு நச்சு உரம் கலந்துள்ளது என்பதைக் கண்டறிந்து அதை நுகர்வோருக்கு உணர்த்தும் கடமையை மத்திய, மாநில அரசுகள் செய்வதே இல்லை. இதைச் செய்வோர் தனியார் அமைப்புகள்தான்.
சரியில்லாத உணவு, மருந்தால் சாகும் அமெரிக்கர்கள் எண்ணிக்கை மிகமிகச் சொற்பம் என்றபோதிலும் இந்தக் கெடுபிடி.
தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவைப் பின்பற்றும் இந்திய அரசும், அரசியல்வாதிகளும் இதுபோன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் அமெரிக்காவை அலட்சியம் செய்வதை "செலக்டிவ் அம்னீஷியா' (வசதியான ஞாபகமறதி) என்றுதானே குறிப்பிட வேண்டும்
No comments:
Post a Comment